Sunday, September 1, 2019

Nitrogen - காலகம்
Virtual Reality - கானல் தோற்றம் அல்லது கானல் உணர்வு 

Thursday, March 3, 2016

Spike - மின் துள்ளல்

ஒரு குறிப்பிட்ட அழுத்தத்துடன் பாய்ந்துகொண்டிருக்கும் மின்சாரம் சில மாத்திரை நேரம் மட்டும் மிகுந்து பின் மீண்டும் சீராய் பாய்வதை ஆங்கிலத்தில் "Spikes" அல்லது "Spiking" என்று விளிப்பர். இவற்றால் வரும் பழுதினை தடுக்கும் கருவிக்கு "Spike Buster" என்று பெயர். இவ்வாறாக மின்சாரம் துள்ளி விழுவதால் இதனை தமிழில் "மின் துள்ளல்" என்று குறிப்பிடுவது பொருத்தமாயிருக்கும் என்று எண்ணுகிறேன். 

Monday, August 31, 2015

Algorithm - வினைச்சரம் 

ஆங்கிலத்தில் "algorithm" என்றழைக்கப்படும்  சொல் கணினித்துறையில் பரவலாக பயன்பாட்டில் உள்ள ஒன்று. கணினி மூலம் ஒன்றன் பின் ஒன்றாக செய்யப்படும் செயல்களை கோர்த்து வரிசைப்படுத்தப்பட்டு உருவாக்கப்படும் கட்டு "algorithm" எனப்படும். ஒரு குறிப்பிட்ட கணினி மொழி என்று வரையறுக்கப்படாமல் பொதுவான செயல் கோர்ப்புதான் "algorithm" ஆக அழைக்கப்படுகிறது. இதனை  தமிழில் "வினைச்சரம்" என்று குறிப்பிடலாம் என்று எண்ணுகிறேன்.

Thursday, December 4, 2014

தலையங்கம்

தொலைக்காட்சி பெட்டிகள் விலை உயர்ந்த பொருளாக இருந்த காலத்தில் அக்கம்பக்கத்து செல்வந்த வீடுகளில் சென்று ஒளியும் ஒலியும் பார்த்து வந்தோம் . சில ஆண்டு கழித்து நம்மிடம் தேவையான செல்வம் சேர்ந்தபிறகு நமக்கென தொலைக்காட்சி பெட்டி வாங்கி வைத்து மகிழ்ந்தோம். அவ்வாறே, ஆரம்பத்தில் தமிழில் நவீன தொழில்நுட்ப சொற்கள் இல்லை என்று வேற்றுமொழி சொற்களை பயன்படுத்தி வந்தோம். ஆனால், இன்று உலகம் முழுவதும் பல மதிநுட்ப தொழில்களில் தமிழர்கள் பலர் முன்னோடிகளாக செயலாற்றுகிறார்கள். இணையத்திலும் தமிழ்மொழி வேகமாக வளர்ந்துவருகிறது. இக்காலகட்டத்தில் நம் மொழியில் நமக்காக வார்த்தைகளை கொண்டு வந்து குவிக்க முனைய வேண்டும். திரைகடலோடி திரவியம் தேடிய பிறகும் "அண்டைவீட்டு தொலைகாட்சிதான்" வேண்டும் என்று அடம் பிடித்தல் கற்றோர்க்கு அழகில்லை.

இந்த வலைப்பூவின் நோக்கம், வாரம் ஒரு வார்த்தையினை தமிழில் கொண்டுவந்து கோர்த்தலே. இதனை தனி மனிதன் செய்ய முற்பட்டால், 30 ஆண்டுகளில் ஏறக்குறைய 1500 வார்த்தைகள் மட்டுமே குவித்திருப்பான்(ள் ). சில இலட்சம் தமிழர்கள் இதனை செய்தால், 30 ஆண்டுகளில் தமிழ்மொழி உலகிலேயே அதிக சொற்களை கொண்ட மொழியாக என்றும் நிலைத்து நிற்கும். தமிழ்மொழி ஊடாக உலகத்தை காணத்துவங்கிய நாம், இன்று தமிழுக்கு வலு சேர்க்கும் இந்த ஒரு செயலை செய்நன்றியாக செய்தல் அவசியமாகிறது.

சிறு துளிகள் பல சேர்ந்துதான் பெரு வெள்ளம் உருவாகிறது.